
வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை" என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.
முல்லைத்தீவில் நின்று பண்டார வன்னியனின் வரலாற்றுத் தோளுரசியதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டார வன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டார வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது.