வன்னி தேர்தல் மாவட்டம்

இலங்கையில், நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகே வன்னித் தேர்தல் மாவட்டம் எனப்படுகிறது. இது இலங்கையின் வட பகுதியில், வடக்கு - கிழக்கு மாகாண சபையின் கீழ் அமைந்துள்ளது. இப்பகுதி மிகவும் மக்கள்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாக இருப்பதனால், பரப்பளவில், வடக்கு - கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய தேர்தல் மாவட்டமாக இருப்பதுடன், முழு நாட்டிலும் உள்ள பெரிய தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத் தேர்தல் மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

உருவாக்கம்

இலங்கையில், 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம், விகிதாசாரத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னிருந்த தேர்தல் முறையின் கீழ் நாட்டிலிருந்த நிர்வாக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் பல தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். 1978 இல் இம்முறை ஒழிக்கப்பட்டது. விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் பல தேர்தல் தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுத் தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவானவற்றில் ஒன்றே வன்னித் தேர்தல் மாவட்டம் ஆகும்.

பெரும்பாலும், ஒவ்வொரு நிர்வாக மாவட்டமும் ஒரு தேர்தல் மாவட்டமாகவும் அமைந்தது. ஆனால் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்தால், இம் மாவட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியை மட்டுமே கொண்டிருந்தன. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் பல உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு மக்கள் தொகை போதுமானதாக இல்லாதிருந்ததால், அருகருகேயிருந்த இம் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி வன்னித் தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

மக்கள் தொகை
வன்னித் தேர்தல் மாவட்டம் இலங்கையில் உள்ள மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்று. இங்கே முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது 1981 ஆம் ஆண்டில். இப்பகுதியில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக, அதன் பின்னர் இப் பகுதியில் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. ஆனாலும், இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் இப்பகுதிகளுக்கான மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை - வன்னித் தேர்தல் மாவட்டம்
மாவட்டம் கணக்கெடுப்பு ஆண்டு


1981 2001
மன்னார் 106,235 151,577
வவுனியா 95,428 149,835
முல்லைத்தீவு 77,189 121,667
மொத்தம் 278,852 423,079

2003, 2004 ஆம் ஆண்டுகளின் மதிப்பீடுகளை அடிப்படியாகக் கொண்டு கணிக்கப்பட்ட இத்தேர்தல் மாவட்டத்தின் இனங்களின் விகிதாசாரம்:
சிங்களவர் - 3.66 %
தமிழர் - 92.43 %
முஸ்லிம்கள் - 3.90 %


பரப்பளவு - வன்னித் தேர்தல் மாவட்டம்
மாவட்டம் பரப்பளவு (ச.கிமீ)
மன்னார் 2002.07
வவுனியா 1966.90
முல்லைத்தீவு 2616.90
மொத்தப் பரப்பளவு 6585.87